18 வயது நிரம்பாத மைனர் ஒருவருடன் வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்துவது போக்சோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் குற்ற பிரிவின் கீழ் வராது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீரப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், அந்த சிறுவனிடம் வாய்வழி உடலுறவு கொண்டு இருக்கிறார்.

அதோடு சிறுவனுக்கு 20 ரூபாய் பணம் கொடுத்து இதை யாரிடமும் தெரிவிக்க கூடாது, வெளியே கூறினால் கொடூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தாருக்கு இந்த சம்பவம் தெரிந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 377, 506, போக்சோ சட்டம் ஆகியவை கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த ஜான்ஸி விசாரணை நீதிமன்றம், இது கடுமையான பாலியல் குற்றம் என்று போக்சோ சட்டத்தின் கீழ் தீர்ப்பளித்து, அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் ஓஹா நேற்று (24.11.2021) தீர்ப்பு வழங்கினார்.

அதில், “இந்த வழக்கில் குற்றவாளி மைனருடன் வாய்வழி உடலுறவு கொண்டு இருக்கிறார். வாய்வழி உடலுறவு கொள்வதை மோசமான பாலியல் குற்றத்தின் கீழ் சேர்க்க முடியாது. இது ஊடுருவல் வகை பாலியல் உறவில் சேரும். அதை கடுமையாக பிரிவான Section 5/6, Section 9 கீழ் சேர்க்க முடியாது.

எனவே இதற்கு போக்சோ சட்டம் பிரிவு 5/6 மற்றும் 9 (எம்) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் போக்ஸோ சட்டம் பிரிவு 4-ன் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் என்பது வராது. ஆதலால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பிற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று வழக்கு ஒன்றில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதில், “சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது போல சட்டம் இருக்க கூடாது. உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல் தான். பாலியல் ரீதியாக உடலில் எப்படி தொட்டாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும். இதில் சட்ட ரீதியாக மாற்றம் செய்ய முடியாது. இதனால் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.