ஆர்கிடெக்ட் அன்வே நாயக் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் ஆகியோரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப்கோஸ்வாமி, ஃபெரோஸ்ஷேக் மற்றும் நித்திஷ் சர்தா ஆகிய மூவர் மீதும் 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிர காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அப்போது மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் அன்வே நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டம் அலிபாக் காவல்துறையினர் நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஜாமீன் பெற்று அர்னாப் கோஸாமி தற்போது வெளியில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி உள்பட மூவர் மீது மும்பை காவல்துறை அலிபாகில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் 65 பேரின் பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் கராத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அர்னாப் கோஸாமி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆனால், அந்த மனு நேற்றுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு