அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அருகே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்துக்கு செல்வதற்காக அருகே அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது அதிபர் உத்தரவின் பேரில் கண்ணீர் புகை குண்டுகள், தீக்குண்டுகள் உள்ளிட்டவை வீசி கலைக்கப்பட்ட பின்னர், அந்த புகழ் பெற்ற தேவாலயத்தின் முன் நின்றபடி பைபிளைத் தூக்கிக் காட்டி போஸ் கொடுத்தார் டிரம்ப். இதற்காக அதிபர் டிரம்ப் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார்.

இதனையடுத்து பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் அதை மீறி வெள்ளை இன மக்களும் கலந்து கொண்டு, இந்த மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். ஜார்ஜ் பிளாய்ட் இறந்ததைக் கண்டித்து ஏழு நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன.

மேலும் வாசிக்க: ‘I Can’t Breathe’… அமெரிக்காவில் இனவெறியால் கொல்லப்பட்ட இளைஞரின் கடைசி வார்த்தைகள்

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர, ராணுவத்தை அழைக்கவும் தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஹூஸ்டன் மாகாண காவல் துறைத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் இந்தப் போராட்ட விஷயத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், இந்த விஷயத்தில் அவரால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியவில்லை என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம் என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.