ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மொத்தம் 1,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக கேரளாவில் ஜூன் 1-ம்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. டிவி மூலமாகவும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இருப்பினும் மாநிலத்தில் 2.50 லட்சம் மாணவ மாணவிகள் டிவி அல்லது இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கின்றனர். இதற்காக மையங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்தில் 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆன்லைன் கிளாஸ் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சேனலிலும் இந்த பிரத்யேக வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாணவியிடம் ஸ்மார்ட் போன் இல்லை. வீட்டில் டிவியும் ரிப்பேர் ஆகிவிட்டதால், அந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.

மேலும் வாசிக்க: ஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது- பிரதமர் மோடி வேதனை

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி, உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டு, பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பு கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

எத்தனையோ கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர். அதனால், இந்த ஆன்லைன் வகுப்புகள் உட்பட மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.