நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லெண்ணம் மற்றும் நன்னடத்தை அடிப்படையில், 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து, முன் விடுதலை செய்வது தொடர்பாக ஆதிநாதன் தலைமையிலான குழு பரிந்துரைகளை வழங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வது குறித்த முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, உரிய விரிவான வழிமுறைகள் வகுத்து அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள். பல்வேறு இணை நோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டும்,

இது குறித்தான மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்க ஏதுவாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையின் கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர். மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைக்க அமைக்கப்பட்டுள்ள குழு, புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.