குட்கா ஊழலை போல மணல் விற்பனையிலும் கொள்ளையடிக்கப்படுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
 
சென்னையில் செய்தியாளர்களை சநந்தித்து பேசிய மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள பொதுப்பணித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டதாக கூறினார்.
 
ஆவடி தாலுகா பொத்தூர் ஏரியில் ரூ.170-க்கு விற்கப்பட வேண்டிய மணலை ரூ.4,000-க்கு விற்பது தொடர்பான வீடியோவை, அங்கு பணம் வசூலித்தது, மணல் எடுக்க கூடிய பர்மிட் உள்ளிட்ட உரிய ஆதாரங்களுடன் ஆலந்தூரில் உள்ள திட்ட இயக்குனரை தாம் சந்தித்து புகார் அளித்ததாக கூறினார்.
 
ஆனால் கடந்த 31-ம் தேதி கொடுத்த புகார் மனு மீது தற்போது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
 
மணல் கொள்ளை குறித்து ஊழல் தடுப்பு போலீஸிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என அவர் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் பொதுப்பணித்துறையில் தான் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறினார்.
 
புகார் வந்தவுடன் விரைந்து செயலாற்றி நடவடிக்கை எடுப்பதற்காகவே ஊழல் தடுப்பு துறை. ஆனால் நடப்பதோ வேறு. அரசு அதிகாரி மீது ஊழல் தடுப்பு துறையிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இதில் யார் யார் உடந்தையாக உள்ளனர் என யுவராஜ் கேள்வி எழுப்பி உள்ளார் .
 
மேலும் விநியோகம் செய்யப்படும் மணல் மற்றும் எம்சாண்ட் தரமற்றதாக உள்ளது என யுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
இதன் தரத்தை அதிகாரிகள் முறைப்படி சோதிப்பதில்லை என்றும் சாடினார். மணல் விற்பனையில் நடைபெற்று வரும் ஊழலை கண்டித்து வரும் மார்ச் 19-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.