பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். இந்திய விமானப் படை இதை விபத்து கூறிய நிலையில், மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், இதை பற்றி வேறு விதமான கருத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டார். ஆனால், இதனால் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவரின் பதிவை நீக்கிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாரிதாஸ் மீது தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயற்சி, பொது அமைதியை சீர்குலைத்தல், அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு 14.12.2021 அன்று விசாரணைக்கு வந்தபோது, எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் இந்த வழக்கில் செய்யப்படவில்லை. எனவே மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ்18 அனுப்பியது போல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரிலும், கொரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

இதில் போலி மின்னஞ்சல் வழக்கில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை மாரிதாஸை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே மேலப்பாளையம் காவல்துறையினர் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று (23.12.2021) விசாரணைக்கு வந்தபோது, மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறி, மாரிதாஸ் மீது மேலப்பாளையம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.