ஒன்றிய அரசின் வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்திற்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்டு கர்நாடகா தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகள் குறைபாடுள்ளதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதனையொட்டி ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொது மக்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணக்கொடி) என்ற அறிவிப்பிற்கு ஏற்ப இந்திய தேசியக் கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக் கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக குஜராத்தில் உள்ள பல்வேறு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் தெற்கு கர்நாடக மண்டல தபால் துறை மூலம் பெறப்பட்டது.
வழக்கமான கதர் துணியாலான கொடிகள் தவிர பாலியஸ்டர் துணியாலான தேசியக் கொடிகள் அதிகளவில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கொடிகள் குறைபாடுடன் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தேசிய கொடியில் மூன்று வர்ணங்களும் சம விகிதத்தில் இல்லை மற்றும் கொடியின் அளவும் 3:2 என்ற விகிதத்தில் இல்லை, தவிர அசோக சக்கரம் சரியான இடத்தில் அச்சிடப்படவில்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களாக மங்களூர் மண்டலத்திற்கு உட்பட்ட புத்தூர், கொக்கடா, மடந்தையார், பெல்தங்கடி, சூரத்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் மக்கள் மொத்தமாக வாங்கிச் செல்லும் நிலையில் ஒவ்வொன்றையும் சரிபார்க்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து மங்களூரு மண்டல தபால் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த வார இறுதியில் பெருமளவு விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குஜராத்தில் இருந்து முதலில் வந்த பார்சல்களில் பெருமளவு குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.