நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இந்திய தேசியக் கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதனையொட்டி ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொது மக்கள் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் தேசியக் கொடிகள் கிடைக்கும்.

பொதுமக்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி அதனுடன் செல்ஃபி எடுத்து ஒன்றிய அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான மூன்று நாள் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் அளித்த பேட்டியில், “நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது.

பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை ஒன்றிய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது.

ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். மேலும் இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும் என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசின் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படும் ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணக்கொடி) என்ற அறிவிப்பிற்கு ஏற்ப இந்திய தேசியக் கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

அதாவது நமது தேசியக்கொடியை சூரிய உதயத்தில் பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் பொது மக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம்.

இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக் கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக் கொடிக்கும் அனுமதி கிடையாது. இப்போது இதிலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது எந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கலாம்.

இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வருகிற பல்வேறு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.