ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் கூறப்படுவது தவறான தகவல் எனவும், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு பல ஆண்டுகளாக அரசின் கீழ் உள்ள ரயில்வே, விமான நிலையங்கள், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.

அதன்படி ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.

அதன்பின், கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பணிகளை தீவிரப்படுத்திய ஒன்றிய அரசு இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15 ஆம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

இதில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை ஒன்றியஅரசுக்கு சமர்ப்பித்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (Department of Investment and Public Asset Management) செயலாளர், “ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் கூறப்படுவது தவறான தகவல் எனவும், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

CMDA பணி நியமன முறைகேடு- வெளிவரும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்