லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 15ம் தேதி சண்டை நடந்தது. இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டையை தீர்க்க விரும்புகிறோம் என்று இந்திய- சீனா இரு நாடுகளும் தெரிவித்து வரும் நிலையிலும், கல்வான் பகுதியில் சண்டை நடந்த அதே இடத்தில் தற்போது சீனா மீண்டும் படைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 22 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேக்சார் எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றால் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் படமானது ரோந்து புள்ளி 14க்கு அருகில், கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய சீன ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றது. மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவில் இது அமைக்கப்பட்டுள்ளது என்று இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் அஜய் சுக்லா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க: 1 கோடியை எட்டும் கொரோனா எண்ணிக்கை: WHO எச்சரிக்கை

இதுகுறித்து இந்தியாவின் முன்னணி கார்ட்டோகிராஃபர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரமேஷ் பாத்தி கூறும்போது, ரோந்து புள்ளி 14 ஐச் சுற்றி ஒரு ஊடுருவலின் தெளிவான அறிகுறிகள் உள்ளன. மேலும், படங்கள் கனரக வாகனங்களின் தெளிவான இயக்கத்தைக் காட்டுகின்றன, அவை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக கல்வான் நதியை நோக்கி சீனா எழுப்பி உள்ளதாக கருதப்படும் இந்த கட்டடங்கள் மே மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சண்டை நடந்த இடத்தில இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.