இந்திய- சீன எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் கல்வான் பகுதியில், சீன ராணுவம் இந்திய ராணுவ வீரர்களை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்.19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, ‘இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்றும், எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை’ எனவும் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பேச்சு குறித்து, “இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை என்றால், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எந்த இடத்தில் வீரர்கள் கொல்லப்பட்டனர்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் பிரதமர் மோடி உரையை சீன ஊடகங்கள் பாராட்டுவதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, “சீனா, இந்திய ராணுவத்தினரைக் கொன்றது. சீனா, இந்திய நிலத்தைக் கைப்பற்றிவிட்டது. பிறகு இந்த பிரச்னைக்கு மத்தியில் ஏன் சீனா மோடியைப் புகழ்கிறது?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க: சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்- ராஜ்நாத் சிங்
முன்னதாக லடாக்கில் சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதை சீன ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சீனா அத்துமீறவில்லை என்பதை மோடி ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால் எல்லை பிரச்சனை இந்தியாவில் நடக்கவில்லை.
சீனாவின் எல்லைக்குள் தான் இந்திய ராணுவம் நுழைந்துள்ளது என்பதை மோடி இதன் மூலம் ஒப்புக்கொண்டு இருக்கிறார். மோடியின் இந்த பேச்சு எல்லை நிலவரத்தை துல்லியாமாக எடுத்து உரைக்கிறது. சீனாவுடன் தொடர்ந்து மோதல் வேண்டாம் என்று பிரதமர் மோடி இப்படி கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு கண்டிப்பாக அமைதிக்கு வழி வகுக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மோடியின் பேச்சு காரணமாக சீனா மீது இந்தியர்கள் இனி தவறாக பழி போட முடியாது. சீனாவிற்கு எதிராக அவர்கள் எழுத முடியாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாக மோடி கூறியது இந்திய மக்களை திருப்தி படுத்த மட்டுமே. இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்க மட்டுமே அவர் இப்படி பேசி இருக்கிறார், என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.