பூரி நகரின் புகழ்பெற்ற ஜெகன்நாதர் ரதயாத்திரை தடை செய்து ‘நாங்கள் தேரோட்டம் நடக்க அனுமதித்தால் பூரி ஜெகந்நாதரே எங்களை மன்னிக்கமாட்டார்’ என தீர்ப்பளித்த 3 நாட்களில், தீர்ப்பை மாற்றி தேரோட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகன்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் திருவிழாவின்போது நடைபெறும் ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. தேரோட்டத்துக்காக 16, 14, 12 சக்கரங்கள் கொண்ட தேர் ஆண்டுதோறும் புதிதாக மரத்தால் செய்யப்படுகிறது.

பூரி ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்திரா ஆகியோர் வெவ்வேறு ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா இந்தாண்டு ஜூன். 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.

ஆனால் ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், இந்த திருவிழாவை நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு மேலும் கொரோனா பரவல் தீவிரமாகும். எனவே தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த மனுவை கடந்த ஜூன்.18-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, “கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு இந்த ஆண்டு நாங்கள் தேரோட்டத்தை நடக்க அனுமதித்தால் பூரி ஜெகந்நாதரே எங்களை மன்னிக்கமாட்டார்” எனகே கூறி தடை விதித்தனர்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ் எனும் அமைப்பும், அப்தாப் ஹூசைன் என்பவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, தேரோட்டம் என்பது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. இந்த தேரைச் செய்வதற்காக 372 பேர் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு தேர் செய்து வருகிறார்கள். எனவே முந்தைய தடை உத்தரவை நீக்கி திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல் பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை பக்தர்கள் இல்லாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஜூன்.22) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தினேஷ் மகேஸ்வி, ஏஎஸ்.போபண்ணா அமர்வு முன்பு காணொலியில் விசாரிக்கப்பட்டது. அதல், “பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒடிசா அரசு, மத்திய அரசு, கோயில் நிர்வாகம் இணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ரத யாத்திரையை நடத்திக் கொள்ள வேண்டும்” என தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கும், முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் மத்திய அரசுக்கும் எங்களது நன்றி. பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்த மாநில அரசும், கோயில் நிர்வாகமும் முழு அளவில் தயாராகி வருகிறது.

இதற்காக 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த பணிகளை ஒருங்கிணைப்பார்கள். பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவ வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ‘WeChat’ சீன செயலியில் பிரதமர் மோடியின் கருத்துகள் நீக்கம்..?