சீனா ராணுவம் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை ரஷ்யா செல்லவுள்ள நிலையில் (ஜூன்-21) இன்று சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட முப்படை தளபதிகளும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய ராஜ்நாத் சிங், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சமாளிக்க இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு இந்திய ராணுவம் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன.

எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனா அத்துமீறினால் காமாண்டோ வீரர்கள் துணிச்சலாக சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75 ஆம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24ல் மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசுப் பயணமாக நாளை (ஜூன்-22) மாஸ்கோ புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவின் சீனா எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷா மகன்