சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன், பணிச்சுமை, மனஅழுத்தம் காரணமாக 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மருத்துவர்களும், சுகாதாரத்துறை பணியாளர்களும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இதனால் கடும் மன அழுத்ததுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் (25 வயது) என்பவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதுகலை எலும்பியல் மருத்துவ பயிற்சியாளராக மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி கொரோனா சிகிச்சையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை மருத்துவர் கண்ணன் மருத்துவமனை விடுதியில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தலையில் பலத்த காயங்களுடன் விடுதி வளாகத்தில் இருந்த அவரை சக பயிற்சி மருத்துவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: நேபாளி வேடம் போட்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல ரூ.1000 வழங்கிய இந்துத்துவா அமைப்பினர்

அவரது அறையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டும். பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டுமென மருத்துவர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து  வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.