ஊரடங்கில் வேலை இழந்து தவிக்கும் பிற மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல 2 வாரங்களுக்கு Shramik Express சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான கட்டணத்துடன் கூடுதல் கட்டணமாக ரூ50 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று Shramik Express சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படும், இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று 5 Shramik Express ரயில்கள் இயக்கப்பட்டன. சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க: மருத்துவமனைகள் மீது மலர் தூவி, முப்படைகள் அணிவகுப்பு நடத்தி கவுரவிக்கும்- இராணுவ தளபதி பிபின் ராவத்

பொதுவாக இந்த ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் 72 பேர் பயணிக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் 54 பேர் மட்டுமே ஒரு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். ஒரு ரயிலுக்கு மிக அதிகபட்சமாக 1200 பேர்தான் பயணிக்க முடியும்.

இந்த ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டுகள் கட்டணமாகப் பெறப்படும். அத்துடன் சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கான ரூ.30; கூடுதல் கட்டணமாக ரூ.20 என மேலும் ரூ.50 வசூலிக்கப்படும். பயணிகளிடம் இருந்து மாநில அரசுகள் கட்டணத்தை வசூலித்து ரயில்வே நிர்வாகத்திடம் செலுத்திவிடும். 12 மணிநேரத்துக்கும் மேலாக பயணம் மேற்கொள்ளும் ரயில்களில் ஒரு நேரத்துக்கு மட்டும் உணவு வழங்கப்படும். மாநில அரசுகள், உணவுப் பொட்டலங்களை பயணிகளுக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் ஆலோசனை கூறியுள்ளது.

இச்சிறப்பு ரயில்கள் அனைத்தும் பாயிண்ட் டூ பாயிண்ட் அடிப்படையில்தான் இயக்கப்படும். அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 31 சிறப்பு ரயில்களை கேட்டிருக்கிறது. இதற்கான அட்வான்ஸ் தொகையையும் ஜார்க்கண்ட் நிர்வாகம், ரயில்வே துறைக்கு செலுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.