மே.31ம் தேதியோடு பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில் ஜூன்.30 வரை ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்துள்ள மத்திய அரசு 50 சதவீதக்கும் மேலாக தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிவிப்புகள் UNLOCK 1.0 என்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகள் வரும் ஜூன் 8ம் தேதியில் இருந்து மூன்று கட்டமாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி.

கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமான பயணம், மெட்ரோ ரயில் இயக்கம் உள்ளிட்டவை இயங்க அனுமதி.

மேலும் வாசிக்க: உணவு, தண்ணீர், இலவச போக்குவரத்து- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்த மூத்த வழக்கறினர்கள்

இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையில் தனிநபர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்லலாம்.

கட்டுப்பாடுகள் தளர்வு நோய் தடுப்பு மண்டலங்களான Containment zoneகளுக்கு பொருந்தாது. நோய் தடுப்பு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆனால் இதில் மாநில அரசுகள் சொந்தமாக முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ள மத்திய அரசின் அறிக்கை, பொருளாதார இலக்கை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மேற்கண்டவைகள் இயங்கவும், மக்கள் சரீர இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.