ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான நாடுகள் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை வாங்கி குவித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

ஆனால் இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசு தடுப்பூசிகளை அதிகளவில் இறக்குமதியைச் செய்வதை விடுத்து ஏற்றுமதியை அதிகரித்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 100% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்தது.

தற்போதோ 50% மட்டுமே கொள்முதல் செய்கிறது. எஞ்சிய 50% தடுப்பூசிகளை மாநில அரசுகள் வாங்கி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு, வெறும் அறிவிப்பாகவே உள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு வழங்காமல் வெளிநாடுகளுக்கும் தனியார்களுக்கும் வழங்குகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையைக் கூட ஒன்றிய அரசு விடுக்கவில்லை. இதனால் மாநில அரசுகள் ஒன்றிய அரசு தரும் தொகுப்பு தடுப்பூசிகளை மட்டுமே செலுத்தி வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் கைவிரிக்க பைசர், மாடர்னா போன்ற சர்வதேச தடுப்பூசி நிறுவனங்களிடம் மாநில அரசுகள் வாங்க நினைத்தன.

ஆனால் அந்த நிறுவனங்களும் தாங்கள் ஒன்றிய அரசிக்கு மட்டுமே தடுப்பூசிகளை விற்போம் என்று தெரிவித்துவிட்டனர். இவற்றை தீர்க்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு அமைதி காக்கிறது. இப்போது மாநில அரசுகள் மக்களை காக்க செய்வதறியாது விழித்து நிற்கின்றன.

இச்சூழலில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆதரவளித்ததால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும். குறிப்பாக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் முக்கியவத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கேரள உயர் நீதிமன்றத்தில், கொரோனா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, “கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் கள்ளச்சந்தைகளில் இருந்து எளிதில் பெற்றுவிடுகின்றன. ஆனால், அரசாங்கம் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தவிக்கிறது. கொரோனா தடுப்பூசி கள்ளச்சந்தையை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது” என கேரள அரசு குற்றச்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு தடுப்பூசி கொஞ்சமா போடுங்க; தட்டுப்பாடு வராது- பாஜக முதல்வர்