கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில், மே 3ம் தேதி, மருத்துவமனைகள் மீது மலர்தூவி, மற்றும் கடற்படை கப்பல்கள் கடலில் அணிவகுப்பு நடத்தி, கொரோனாவுக்கு எதிரான சண்டையில் முப்படைகள் தங்களது கடைமையை உணர்ந்து செயலாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முப்படைகள் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து முப்படைகளில் தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் முப்படைகளின் தளபதிகள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சற்று முன் நடந்தது. அதன்பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிபின் ராவத் உள்பட முப்படைகளின் தளபதிகள் கூறுகையில், “கொரோனாவை எதிர்கொள்ள இனி வரும் நாட்களில் அரசோடு இணைந்து முப்படைகளும் தங்கள் கடைமையை மேற்கொள்ளும்.

கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, மே 3ஆம் தேதி மாலை, கடற்படையின் போர்க்கப்பல்களில், ஒளிவிளக்குகள் மிளிரும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரை கௌரவிக்கும் வகையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொண்டு மருத்துவமனைகள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

மேலும் இராணுவத்தின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடற்படை சார்பில் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான கப்பல்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் அணிவகுப்பில் ஈடுபடும்.

இதேபோன்று, விமானப்படை விமானங்கள், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல், கேரளாவின் திருவனந்தபுரம் வரை வடக்கிலிருந்து தெற்காக அணிவகுத்து பறந்து செல்லும். மற்றொரு மார்க்கத்தில், கிழக்கே அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் பகுதியிலிருந்து மேற்கே குஜராத் மாநிலம் கட்ச் வரை விமானங்கள் பறந்து செல்லும். இதில் ராணுவத்தின் சரக்கு மற்றும் போர் விமானங்களும் இடம் பெற்றிருக்கும்.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..மருத்துவர் பிரதீபா மரணத்தில் சர்ச்சை

மேலும் கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில், காவல் துறையினர் சிறப்பான பணியை மேற்கொள்கின்றனர். அந்த பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும். அங்கு, ராணுவத்தை களமிறக்குவதற்கான தேவையில்லை” என்று பிபின் ராவத் கூறியுள்ளார்.