‘மின்சார சட்ட திருத்த மசோதா 2020’-ல் உள்ள அம்சங்கள் முற்றிலும் ஏழை – எளிய மக்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய வரைவு திருத்தச் சட்டத்தை ஏப்ரல் 17ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது.

ஆனால், இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் மாநில உரிமைகளுக்கு எதிராகவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

‘மின்சார சட்ட திருத்த மசோதா 2020’-ல் முன்வைக்கப்படும் திருத்தங்கள்: மின் கட்டணம் உற்பத்தி செலவுக்கு இணையாக இருக்கவேண்டும் என்றும் அப்படி இருந்தால் தான் விநியோகிக்கும் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

மாநிலங்களில் உள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள், அரசு அளிக்கும் மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கலாம். மானியத் தொகை மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் மின்சார ஒப்பந்தங்களைச் செயல்படுத்த ஆணையம் ஒன்றை அமைக்க முடிவு செய்ய இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அமலாக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரமும் வழங்கப்படும்.

அதனால் மின்சாரத்தை வாங்குவது, விற்பது, கடத்துவது (Transmission) தொடர்பாக உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும்.

இதில், மேல் முறையீட்டுத் தீர்ப்பாணையத்தில் தலைவர் மற்றும் அவர் இல்லாமல் மேலும் 7 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள இந்த சட்டம் இடமளிக்கிறது. இதனால் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பாடும் பிரச்சனை உள்ளிட்ட வழக்குகளை விரைவாக தீர்க்க முடியுமாம்.

மின்சாரச் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும், ஆணையங்களின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும், அபராதங்களை உயர்த்துவது குறித்தும் இந்தச் சட்டம் முன்மொழிகிறது.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க கொள்கை வகுக்கும் ஆவணம் ஒன்றை உருவாக்க இந்த சட்டம் ஏற்பாடு செய்கிறது. எந்த அளவுக்கு நீர் மின் திட்டங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என இந்த சட்டம் தான் வலியுறுத்தும். அதேபோல், புதுப்பிக்கத்தக்க அல்லது நீர் மின் திட்டங்களில் இருந்து முடிவு செய்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்த தவறினால் அபராதம் விதிக்க முடியும் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ஊரடங்கில் வேலை இழந்து தவிக்கும் பிற மாநில தொழிலாளர்களை அனுப்ப கூடுதல் ரயில் கட்டணம்

ஏற்கனவே 2014, 2018ல் இதேபோன்ற திருத்தங்களை சட்டம் மூலமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மாநில அரசுகளும் மின் வாரியங்களின் உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததால், அந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. மே 8ஆம் தேதிக்குள் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். அப்போதும் ஊரடங்கு இருக்கும். நாடு முழுவதும் கொரோனா குறித்த விவாதமும் பதற்றமுமே இருக்கும். இதனை யாரும் கவனிக்க மாட்டார்கள். இதனால் இச்சட்டம் எளிதாக நடைமுறைப்படுத்தப்படும் எனில், இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்களே என அச்சப்படுகிறார்கள் மின்துறை ஆர்வலர்கள்.

மேலும் மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்றுவிடும்.

புதிய மின்சார சட்டத் திருத்தத்தின்படி, அமைக்கப்படும் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களையும் நேரடியாக மத்திய அரசே தேர்வுசெய்யும். இதனால் மாநில உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும்.

அதேபோல் மின் கட்டணத்தை முதலில் செலுத்திவிடுங்கள். பிறகு மானிய பணம் வங்கிக் கணக்கிற்கு அளிப்பதாக சொல்வது நடைமுறை சாத்தியமில்லாதது, பல குளறுபடிகள் நடக்கும் என்கிறார்கள் மின்துறை ஆர்வலர்கள்.

இதுகுறித்து ஹரியானா மாநில மின்வாரியத்தின் முன்னாள் தலைவரான தேவசகாயம் கூறும்போது, “இந்தச் சட்டமே ஒரு சில தனியார் நிறுவனங்களுக்காக, குறிப்பாக சூரியசக்தி மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மின் வாரியங்கள் கடுமையான இழப்பைச் சந்திக்கும்” என்று கூறியுள்ளார்.