2013-ல் இறந்துபோன நபர் 2017-ல் வங்கிக் கடன் வாங்கியதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம். இதேபோல் வங்கியில் கடன் வாங்காத பலருக்கும் கடனைத் திரும்ப செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் திருவாடானை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளையில் இருந்து சின்னகீரமங்கலத்தைச் சேர்ந்த மரியகுழந்தை என்பவருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
 
அதில் மரிய குழந்தை கடந்த 2017-ம் ஆண்டு விவசாயக் கடன் வாங்கியிருந்ததாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து கடன் தொகை ரூ.4 லட்சம் வந்துள்ளதாகவும், எனவே அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த நோட்டீஸை வாங்கிப் பார்த்த மரியகுழந்தையின் மகன் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம் மரியகுழந்தை கடந்த 2013-ம் ஆண்டே இறந்துவிட்டார் என்பதுதான்.
மரியகுழந்தை இறக்கும் வரையில் வங்கியில் எவ்வித கடனும் வாங்கியிருக்கவில்லை. அப்படி இருக்கும் நிலையில் 2013-ல் இறந்துபோன மரியகுழந்தை 2017-ம் ஆண்டில் ஏ.ஜி.எல் என்ற திட்டத்தின் கீழ் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்குப் புகார் அனுப்பவும், வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவும் மரியகுழந்தையின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
 
மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் உள்ளிட்ட மேலும் பலருக்கும் இதேபோல் வாங்காத கடனை வட்டியுடன் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்திருப்பதால் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கிக் கிளை வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.