எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு, மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை எல்ஐசி வைத்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் பொது பங்குகள் விரைவில் வெளியாகும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1 ஆம் தேதி நடந்த பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் கூட எல்ஐசி பங்கு விற்பனை விரைவில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது பொதுப் பங்கு வெளியீட்டிற்காக (IPO) இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) எல்ஐசி நிறுவனம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து மார்ச் மாதத்தில் எல்ஐசி பங்குகள் விற்பனை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எல்ஐசி பங்குகளை விற்கும் முடிவை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்ஐசி நிறுவனம் பல்லாண்டுகளாக பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கியுள்ளது.

அத்தகைய நிறுவனத்தின் 5% பங்குகளை விற்க ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார் மயத்தை நோக்கிய முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று.

ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்ஐசி நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கான நிறுவன தகவல் அறிக்கையை செபியிடம் எல்ஐசி தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய காப்பீட்டுக் களப் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்ஐசி ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம், சென்னை அண்ணா சாலை எல்ஐசி மண்டல அலுவலகம் முன்பு நேற்று (14.2.2022) நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் குறித்து கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பேசிய சுரேஷ் குமார்” செபியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிறுவன தகவல் அறிக்கையில், 5% பங்குகளை, பங்கு விற்பனைக்கு கொண்டுவரப் போவதாக எல்ஐசி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இதற்காக எல்ஐசியின் மூலதன தளம் ரூ.6,300 கோடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 5% அதாவது, ரூ.310 கோடி பெறுமான பங்குகள் விற்பனைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. எல்ஐசியின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.5,39,686 கோடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு மூன்று நான்கு மடங்குகள் இருக்கலாம்.

இந்தியாவின் மிகப் பெரிய பங்கு விற்பனையாக இது இருக்கும் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்ஐசி நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றின் முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 2 முறை எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை பற்றி விவாதிக்கப்பட்டு அது கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் முடிவை எதிர்த்து மக்களின் கருத்து திரட்டப்படும். அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளையும் விரைவில் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.