பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வரி வருவாய் வரும் அனைத்து துறைகளும் தமிழகத்தில் முடங்கி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதிகளும் இதுவரை தமிழகத்திற்கு பெரிய அளவில் விடுவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக கூறுகிறது.

இந்நிலையில் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இலவச மின்சாரத்திற்கு தடைபோடும் புதிய மின்சார சட்டம்-மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சாதனை

விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் நாளை முதல் பெட்ரோல் விலை ரூ.75.53க்கும், டீசல் விலை ரூ.68.21க்கும் விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதே சந்தையில் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்கு தகுந்தாற் போல் விலை குறைப்பு செய்யப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது, வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.