அரசியல் தமிழ்நாடு

துணைவேந்தர் சூரப்பா கடிதம் சர்ச்சை: ‘அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம்’ என திமுக போர்க்கொடி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி நிதி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையானது.

இந்த முடிவின் படி, அண்ணா பல்கலைக் கலகத்திற்கு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும். நிதி பங்கீடு மாநில அரசு தராமல் இருந்தால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தே அண்ணா பல்கலைக் கழகம் விலகி, உயர் கல்வி உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வந்துவிடும்.

மாநில நிதி உரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம். எனவே தமிழக அரசு சூரப்பாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகள் முன்பாக திமுக இளைஞரணியும், மாணவரனியும் இன்று (அக்டோபர்.15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம்” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், சூரப்பா செயல் ஒழுங்கீனமானது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சூரப்பா, தனக்கு மேல் வேந்தர், இணை வேந்தர், அரசு இருக்கிறது என்பதை மதிக்காமல், அதை மீறி மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டு நிதி ஆதாரங்களை பெருக்குவோம் என கூறியுள்ளார். இது ஒழுங்கீனமான நடவடிக்கை. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் வாசிக்க: நீதிமன்றத்தில் குட்டு வாங்கி சொத்துவரி கட்டியும் ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.