கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததற்காக தேர்வுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஒரே சீருடை சட்டத்தின்படி கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில் மாநிலத்தில் பொதுத்தேர்வு நெருங்குவதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, “தேர்வுக்கும் ஹிஜாப் அணிவதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இந்த விவகாரத்தை பரபரப்பாக்காதீர்கள்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று (28.3.2022) கர்நாடகாவில் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. சுமார் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். மாநில அரசு தேர்வு எழுதவரும் மாணவர்கள் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும்; சீருடை இல்லாமல் வரும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்க மாட்டார்கள்.

பொதுத் தேர்வைத் தவற விடுபவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று தெரிவித்திருந்தது. இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கர்நாடகா மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுந்த வந்த இஸ்லாமிய மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. இதனை ஏற்று பெரும்பாலான மாணவிகள் ஹிஜாபை அகற்றிய நிலையில் 8 மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர்.

இதேபோல பாகல்கோட்டை, பீஜாப்பூர், சிக்கமகளூரு, கோலார், உடுப்பிஉள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் எஸ்எஸ்எல்சி தேர்வை புறக்கணித்தனர்.

இதனிடையே பெங்களூருவில் உள்ள கே.எஸ்.டி.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை நூர் பாத்திமா எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்வு அறையில் ஹிஜாப் அணிந்திருந்ததை அறிந்த கல்வித்துறை அதிகாரி ஹிஜாபை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.

அதனை ஏற்க மறுத்த நூர் பாத்திமா, “கர்நாடக கல்வித்துறை மாணவிகளுக்கு மட்டுமே ஹிஜாப் அணிய கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனது ஹிஜாபை அகற்ற முடியாது” என வாதிட்டார். இதனால் நூர் பாத்திமா தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  

அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியை நூர் பாத்திமா ஹிஜாப் அணிந்ததற்காக பணி இடை நீக்கம் செய்வதாக கல்வித்துறை ஆணை பிறப்பித்தது. கர்நாடக அரசின் இச்செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.