டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் லவ்ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகக் கூறி Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனிஷ்க் நிறுவனம் தனது விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘ஒற்றுமை’ எனப்பொருள்படும் ‘ஏகத்வம்’ எனும் பெயரிடப்பட்ட நகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் 43 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது.

இது லவ்ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், ட்விட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. ஆனால், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட பலரும் தனிஷ்க் விளம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஹமீனா ஷாஃபிக், விளம்பரத்திற்கு ஆதரவாக அழகான தனிஷ்க் விளம்பரங்களை கவனிக்க வைத்ததற்கு நன்றி! என கூறினார். ஆனால், நடிகை கங்கனா ரனாவத் பல மட்டங்களில் விளம்பரம் தவறாக உள்ளது இது லவ்ஜிஹாத் மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார். இதனால் இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக விளக்கம் அளிக்காத தனிஷ்க் நிறுவனம், யுடியூப் பக்கத்தில் விளம்பரம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தது. அதில், “இது மத ஒற்றுமைக்காக வெளியான விளம்பரம். இப்பெண்ணை தங்கள் மகள் போல் பாவிக்கும் ஒரு குடும்பத்தில் இவள் மணம் முடித்துள்ளாள். தாங்கள் வழக்கமாக கொண்டாடாத ஒரு நிகழ்வை இவளுக்காக இவர்கள் கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு மதங்கள், வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையே ஓர் அழகான சங்கமம் இது” என்று விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், குஜராத் காந்திநகர் பகுதியில் உள்ள தனிஷ்க் கடை வலதுசாரி கும்பலால் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தனிஷ்க் நிறுவனம் தனது விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இது உணர்வு ரீதியாக மக்களிடையே உணர்ச்சிகரமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதற்காக மன்னிப்பு கோரியதுடன், விளம்பரத்தை நீக்குவதாகவும் அறிவித்து உள்ளது.