திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுக வின் உதயகுமார்.
 
இவர், தனது சொந்த ஊரான நிலக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார். அப்போது, அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ‘எம்.பி அவசரமா போகணும். கேட்டை திற’ என எம்.பி-யுடன் வந்த நபர்கள் கேட் கீப்பரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஆனால் ரயில் வரும் நேரம் என்பதால், ‘கேட்டை திறக்க முடியாது’ என கேட் கீப்பர் சொல்லியதாகவும், அதனால் ஆத்திரமான எம்.பி, கேட் கீப்பர் மணிமாறனைத் தாக்கியதாகவும் புகார் காரணமாக ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மதுரை-திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் சற்று தாமதமானது.
 
இதுதொடர்பாகப் பேசிய மணிமாறன்,” சாயந்திரம் ரயில் வர்ற தகவல் எனக்கு கிடைச்சதும் நான் கேட்டை மூடினேன். கொஞ்ச நேரத்துல எம்.பி-யின் கார் வந்துச்சு. கார்லயிருந்து இறங்குனவங்க, ‘கேட்டை திற கார்ல எம்.பி இருக்காரு’ன்னு சொன்னாங்க.
 
 
எம்.பி-யவே எதிர்த்துப் பேசுறியா?ன்னு நெஞ்சுல கை வெச்சுத் தள்ளிவிட்டுட்டாரு. நான் மரத்துல மோதிட்டேன். எம்.பிகூட இருந்தவங்களும் என்னைத் தாக்குனாங்க” என்றார் வேதனையுடன்
 
இச்சம்பவத்தை தொடர்ந்து, அழகம்பட்டி, கொடைரோடு, அம்பாத்துரை, காந்திகிராமம், வெள்ளோடு உட்பட ஐந்து ரயில்வே கேட்கீப்பர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால், மதுரை-திண்டுக்கல் மார்க்கத்திலும், திண்டுக்கல் – மதுரை மார்க்கத்திலும், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கொடைரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. பின்னர், ரயில் ஓட்டுநர்களே, கேட்டுகளை மூடிவிட்டு, ரயில்களை இயக்கிச் சென்றனர். இதனால், மூன்று ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக திண்டுக்கல் வந்தடைந்தன. பயணிகள் கடும் அவதிக்கு ஆளகினர்.
 
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கேட் கீப்பர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
 
இந்நிலையில், தீடிர் திருப்பமாக கேட் கீப்பர் தாக்கியதால் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் எம்.பி. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கேட் கீப்பர் புகாரை தொடர்ந்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் எம்.பி உதயகுமார் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கேட் கீப்பர் செல்போன் பயன்படுத்திக்கொண்டு கேட்டை மூடியதாகவும், இப்படி அலட்சியமாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, தன்னை கேட் கீப்பர் மணிமாறன் தாக்கியதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆளும் கட்சி பிரஷர் காரணமாக புகாரை எடுத்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் ஒரு பக்கம் ரயில்வே கேட்கீப்பர்கள் யூனியன்  மறுபக்கம் ஆளும் கட்சி ., என்ற குழப்பத்தில்  வழக்கை எப்படி கொண்டு செல்வது என்று மண்டையை பிய்த்து கொள்வதாக காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன ..