விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழ்நாடு அரசு விதித்த தடை உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

[su_image_carousel source=”media: 26359,26357,26358″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 08) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க குறைந்தது 5 நபர்களுக்காவது அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத உரிமைகளை விட வாழ்வாதார உரிமை மிகவும் முக்கியமானது. தமிழக அரசு கொரோனா காலத்தில் பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு