தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றபெற்று பாராளுமன்ற மக்களவைக்கு சென்றுள்ளார். ரவீந்திரநாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளரை விட, 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், “ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா இங்கு அதிகம் நடைபெற்றதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், வேலூர் தொகுதியை போல தேர்தலை ஏன் தள்ளி வைக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “எம்.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது.எனவே எம்.பி. ரவீந்திரநாத் எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும். எனவே ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்