அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புலமைப்பித்தன், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர்.

சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த கவிஞர் புலமைப்பித்தன், சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 08 காலை உயிரிழந்தார்.

கவிஞர் புலமைப்பித்தன் கடந்த 1935 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமசாமி. தமிழ் மீது உள்ள ஆர்வத்தாலும், திராவிட கொள்கைகளில் மீதுள்ள பற்றாலும் தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்தில் அறிமுகமானார். எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி, நாயகன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மொத்தம் 200 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வடிவேலு நடித்த எலி படத்துக்கு பாடல்கள் எழுதினார்.

எம்ஜிஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அதிமுக உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. அவருடைய மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதி செய்து கொடுத்த வழக்கு; கர்நாடக அரசுக்கு 30 நாள் கெடு