சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழ்நாடு வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று கட்டாயம்.

இதனால் தொழில் அதிபர்கள் உட்பட பல நிறுவனத்தினர் தடையில்லா சான்று பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.வி.வெங்கடாசலம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் (லஞ்ச ஒழிப்புத்துறை) வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரத்தால் ஆன கலைப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CMDA பணி நியமன முறைகேடு- வெளிவரும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்