சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தன. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை நடைபெறும் தேர்வு காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறுகிறது. மதியம் நடைபெறும் தேர்வு 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரும் ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு