மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து தான் உருவாகிறது என்று தெரிவித்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம் கிராம சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கிராம சபை கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள், தேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தின் தலைப்பு கிராமசபை. கிராமசபை கூட்டங்களை ஆண்டுக்கு 2, 3 தடவை நடத்த வேண்டும் என்ற மரபை வைத்து பின்பற்றி வருகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் முறைப்படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் உங்களோடு நான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிராமம் தான் இந்தியா என்று கூறியவர் மகாத்மா காந்தி. உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது என்று சொன்னவர் காந்தி அவர்கள். அத்தகைய கிராமங்கள் நிறைந்த மதுரை மண்ணை மறக்க முடியாது.

தென்அப்பிரிக்காவில் கோட் சூட் அணிந்து வழக்கறிஞராக பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், மதுரை மண்ணில் கால் பதித்த பின்னர் அரை ஆடை அணிந்த அண்ணலாக மாறினார்.

நாட்டில் ஏழைகள் மாற்று துணிக்குகூட வழியில்லாமல் இருக்கும்போது நமக்கு எதற்கு ஆடம்பர உடை என்று நினைத்தார். உடனே தனது கோட் சூட்டை கழற்றி விட்டு அரை ஆடைக்கு மாறினார். காந்தியை அரை ஆடைக்கு மாற்றி பெருமைப் படைத்தது மதுரை மண்.

எனவே கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடுவதில் பெருமை அடைகிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னேன். இது உங்களுக்கான ஆட்சி, உங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி. கடந்த 4 மாத திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில், 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, சாமானியர்கள் ஆட்சி.

இந்தியாவிலேயே உழவர்களின் கருத்துக்களை கேட்டு வேளாண்மைத் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது திமுக தான். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு.

ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம், வட-தென் மாவட்டம் என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழ்நாடு அமைய பாடுபட்டு வருகிறோம். இங்கு பேசிய பலரும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதிகள் பயன்பெறும் வகையில், பாப்பாபட்டியில் ரூ.23.5 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். பாப்பாபட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நியாயவிலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத்தொட்டி அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்- அதிகாரி வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு