ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் வெப் சீரிஸ்களுக்கு சென்சார் சர்டிபிகேட் அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஓடிடி எனப்படும் ணையதளங்கள் வாயிலாக திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், எக்தா கபூர் தயாரித்துள்ள ‘ட்ரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு – சீசன் 2’ என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இதில் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவர் மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது ராணுவத்தை அவமதிக்கும் செயல் என கூறி, முன்னாள் ராணுவ வீரர் டிசி ராவ் என்பவர் வெப்சீரிஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது சர்ச்சையான நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி வெப் சீரிஸ்களை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் வாசிக்க: விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி திடீர் வழக்கு…