ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் நேரடியாக சூதாட்டத்தில் ஈடுபட தடை உள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இதற்கென ஏராளமான செயலிகள் உள்ளன. ரம்மி, கிரிக்கெட் என பல வகையான சூதாட்டங்கள் ஆன்லைனில் கொடி கட்டி பறந்து வருகின்றன.

ஆன்லைன் சூதாட்டத்தை யார் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் பணம் கட்டி ஆடலாம் என்ற நிலை உள்ளது. அதில் பல இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் வாசிக்க: வீட்டையே சூதாட்ட கிளப்பாக நடத்திய புகாரில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது

கடந்த சில நாட்கள் முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை சுட்டிக் காட்டி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற சமூகக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், நேரடி சூதாட்டம் நடத்த தடை உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து, அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.

மேலும் புளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து உயர்நீதிமன்றம் அந்த விளையாட்டுக்கு தடை விதித்து இருப்பதை சுட்டிக் காட்டி, அதேபோல் தற்கொலை அதிகரிக்க காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும்.

இதில் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என பிரபலங்களால் செய்யப்படும் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி வருவதால், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.