சிந்துபாத் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, தனது அடுத்தப் படத்தில் பைத்தியமாக நடித்து வருகிறார்.

காக்கா முட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியவர் இயக்குனர் மணிகண்டன். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.

குறும்படங்கள் இயக்கும் காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியும், மணிகண்டனும் நண்பர்கள். இது திரை வாழ்விலும் தொடர்ந்தது. விஜய் சேதுபதியை வைத்து, அவர் இயக்கிய ”ஆண்டவன் கட்டளை” ஒரு நல்ல கருத்தை சொல்லும் வெற்றிப் படமாகவும் இருந்தது.

வித்தியாசமான கதைக் களம் மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடிப்பதோடு, ஹீரோயினின் தந்தையாகவும் நடிக்கிறார்.

இதனையடுத்து புதுமுகத்தை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை தன் சொந்த முயற்சியில் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் சரியாக நடைபெறவில்லை. மணிகண்டனின் கடைசி விவசாயி படம் பற்றி கேள்விப்பட்டு தானே அப்படத்தில் நடிப்பதாக கூறி நடித்து வருகிறார்.

மிக வித்தியாசமான வேடத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.