டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
இந்தியாவில் பரவிவரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-DG) என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.
இந்த மருந்தை கடந்த ஆண்டு முதல் சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் இணைந்து உருவாக்கி வந்தனர். தண்ணீர் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தானது, பல்வேறு கட்ட சோதனைகளை கடந்து வந்துள்ளது.
இந்த மருந்து மீதான மருத்துவ பரிசோதனை 3 கட்டங்களாக கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்டு, ஆய்வில் நல்ல முன்னேற்றம் கண்டறியப்பட்டது. இந்த மருந்தில் உள்ள டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-DG) மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
[su_image_carousel source=”media: 23321,23322,23323″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. எனவே இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்தை உபயோகிக்க இந்திய மருத்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-DG) மருத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இணைந்து வெளியிட்டனர். முதல்கட்டமாக 10,000 டி-டியோக்ஸி டி-குளுகோஸ் மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இந்த மருந்துகள் முதல்கட்டமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டிஆர்டிஓவின் கோவிட் எதிர்ப்பு மருந்து 2-DG மீட்பு நேரம், ஆக்ஸிஜன் சார்பு ஆகியவற்றைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டிய விவகாரம்; 25 பேர் அதிரடி கைது