சென்னையின் சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கி.மீ அண்ணாசாலை மூடப்பட்டுள்ளது. அத்துமீறி இந்த சாலையில் வாகனங்களில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகமான ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 26 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது.

சென்னையில் 360க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக திருவொற்றியூர், ராயபுரம், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: 3 மாதங்களில் 3 கோடி மக்கள் பட்டினி இறப்பு- ஐ.நா.சபை வ்ஃப்ப் எச்சரிக்கை

இந்நிலையில், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அண்ணா சாலை மூடப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து வாலாஜா சாலை சிக்னல் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் மக்கள் அத்துமீறி வாகனங்களில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சாலையில் நடமாடும் வாகன எண்ணிக்கை கட்டுபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் அதிகமுள்ள பல சாலைகளை இனங்கண்டு அந்த சாலைகளையும் மூடுவதற்கு காவல்துறையினர் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவில் வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.