“மோடிஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், 25 பேர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் சிக்கித் திணறி வருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தற்போது ஒரே ஆயுதமாகத் தடுப்பூசி கருதப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில், தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “மோடிஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என அச்சிடப்பட்டு இருந்தது.

டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களால் தலைநகரில் திடீர் பரபரப்பு நிலவியது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்த போஸ்டர்களை ஒட்டியது தொடர்பாக 25 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது சொத்துக்களை சிதைப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 மற்றும் 24 முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும், கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள். இந்த போஸ்டரை அச்சடித்ததன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மோடிஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என்று பதிவிட்டு, “என்னையும் கைது செய்யுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “மோடிக்கு எதிராக டெல்லியில் சுவரில் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ். இந்திய தண்டனைச் சட்டம் என்பது தற்போது மோடி தண்டனைச் சட்டமாக மாற்றப்பட்டு விட்டதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் டெல்லி போலீசுக்கு வேறு வேலை இல்லை போலும். என் சுவரில் நானும் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டுகிறேன்;முடிந்தால் கைது செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது; தடுப்பூசி தான் ஒரே வழி: WHO