அதிமுக ஆட்சியின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (CMDA) தகுதியில்லாத 18 பேரை பணியமர்த்தியது தொடர்பாக 2 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் விடுத்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் தான் எடப்பாடி பழனிசாமி அரசால் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கான பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஃபீல்ட் மேன் உள்ளிட்ட 131 காலி பணியிடங்களுக்கு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதற்கு 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.

இதனையடுத்து அந்த பணி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டவர்களில் 18 பேர் அரசு அறிவிக்கப்பட்ட எந்த தகுதிக்கும் உற்றவர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்த பணிக்கான வயது வரம்பு 30 ஆக நிர்ணயித்திருந்த நிலையில், 39 வயதான ஒருவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பட்டப்படிப்பு தகுதி பெற்றதற்கான காலி பணியிடத்துக்கு பட்டமே பெறாதவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு முறைகேடு செய்து அரசு பணியில் சேர்ந்த 18 பேரை சிஎம்டிஏ நிர்வாகம் பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவெடுத்திருக்கிறது. மேலும், தேர்வு முறைகேட்டு விவகாரத்தில் தொடர்புடைய 2 சிஎம்டிஏ அதிகாரிகளுக்கும் நோட்டிஸ் விடுத்து 15 நாட்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஊழல் நடந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததையடுத்து, முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுவரும் நிலையில், அரசு பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை- மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்