தமிழ்நாட்டில் திமுக அரசு கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை பறிப்பதாக கூறி, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்டத்திற்கு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார், “தமிழக பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் 18க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.

தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக, கைது செய்யப்படுகிறார்கள். இப்போது நடைபெற்றது முதல்கட்ட போராட்டம் மட்டுமே. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதுபோல் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடரும் பட்சத்தில்,

பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனையில் வலைப்பதிவு செய்பவர்களையும் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தின் பாஜக அலுவலகத்திலும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில், அனைவரும் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (12.12.2021) ராஜ்பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில் தமிழக அரசு, பாஜக மற்றும் மாரிதாஸ் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் விளக்கி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.