ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோயிலில் வழிபடுவதற்கு மதத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற பரத நாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேன், டிசம்பர் 10 ஆம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது தான் இஸ்லாமியர் என்ற அடிப்படையில் அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜாகீர் உசேன் கூறுகையில், “நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் வைணவ மதத்தை நம்பினாலும், நான் பிறந்த மதத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட அவமானத்தை சந்தித்தது இதுவே முதல் முறை.

நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக சிறிது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜாகீர் உசேன், திருச்சி காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், கோவில் நிர்வாகத்தில் எந்தப் பதவியும் வகிக்காத ரங்கராஜன் நரசிம்மன் என்ற நபர், பல பக்தர்கள் முன்னிலையில் என்னைத் தடுத்து நிறுத்தினார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரங்கராஜன் நரசிம்மனிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. என் மீது புகார் அளிக்கப்பட்டால் அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறேன். விசாரணை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, “நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசனம் செய்யச் சென்றபோது, அவரை மோசமாக நடத்தியது குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தடுத்து நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துலுக்க நாச்சியாருக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு கொண்ட ஸ்ரீரங்கம் பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.