லக்கிம்பூர் கெரி வன்முறையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய அமைச்சர் சென்ற கார் மோதியதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் இதனை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் உ.பி. காவல்துறையினர் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (18.10.2021) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.யின் வடக்கு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி பிரசாந்த் குமார் கூறும்போது, “விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 130 இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 160 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை, அங்கு இயல்பு நிலையை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.