உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்கள் பணிக்கு அமர்த்த விரும்பினால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிபந்தனை விதித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனில் வட இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசின் சிறப்பு ரயில்கள் மூலமும், நடை பயணமாகவும், சைக்கிள், லாரி உள்ளிட்ட இதர போக்குவரத்து வழியாகவும் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

ஊடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய அரசு இயக்கிய சிறப்பு ரயில்களில் பெரும்பான்மையானவை வட இந்தியாவுக்குதான் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் வாசிக்க: ஊரடங்கில் இறந்த பசுவுக்கு ஊர்வலம்- உ.பியில் தொடரும் அராஜகம்

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிற மாநிலங்களில் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் உரிய கவுரவத்துடன் நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இனி பிற மாநிலங்கள் தங்களது மாநில தொழிலாளர்களை பணிக்கு எடுக்க வேண்டுமானால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

தற்போது இடம்பெயர்ந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு லாக்டவுன் கால நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்க கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளோம்” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.