PM-Cares Fund பொது அமைப்பு அல்ல; அதனால் விவரங்களை தர மறுத்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களிடம் நிவாரண நிதி கோரிய பிரதமர் மோடி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency SituationsFund)- PM Cares Fund என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான புதிய வங்கிக் கணக்கை துவக்கினார்.
கொரோனா போன்ற நெருக்கடி காலங்கள் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடும் PM Cares trust உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Cares Fund உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி (PMNRF) இருக்கும் போது புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. PMNRF என்ற பெயரை PM CARES என மாற்றி இருக்கலாம்; புதிய கணக்கு தொடங்கி இருக்க தேவையில்லை. PMNRF- இன் செலவு கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும்; PM Cares Fund-ல் வெளிப்படைத்தன்மை சந்தேகமே என்ற புகார்கள் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூருவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஹர்ஷா கந்துகுரி, அவசரகால நிவாரணம் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவி தொடர்பாக விவரங்களை அளிக்கும் படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்து விண்ணப்பித்துள்ளார்.
குறிப்பாக அந்த மனுவில் PM Cares உருவாக்கத்தின் குறிக்கோள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? என கேள்வி எழுப்பியிருந்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பட்ட விண்ணப்பத்திற்கு 30 நாட்கள் ஆனபோதும் எந்த பதிலும் அரசு அளிக்கவில்லை என ஹர்ஷா கந்துகுரி மேல்முறையீடு செய்திருந்தார்.
அதன் பின்னர், பிரதமர் அலுவலகம் அளித்த தகவலில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் பிரிவு 2 (எச்) இன் கீழ் PM Cares Fund ஒரு பொது அதிகார அமைப்பு அல்ல என்று கூறி ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட விவரங்களை தர மறுத்துள்ளது.
ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது. மேலும் தகவலுக்கு pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: உணவு, தண்ணீர், இலவச போக்குவரத்து- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்த மூத்த வழக்கறினர்கள்
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் PM Cares Fund தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் தர மறுப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஹர்ஷா கந்துகுரி தெரிவித்துள்ளார்.
PM Cares Fund பிரதமர் மோடி தலைவராகவும், மூன்று அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக ஒரு அமைப்பை பற்றி கேள்வி எழுப்பினால் பொது அமைப்பு அல்ல என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிதி தொடர்பாக வெளிப்படை தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.