நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டுமெனில், கீழ்நிலையிலுள்ள 60% மக்களுக்கு அரசின் சார்பில் பண உதவி வழங்கப்பட வேண்டுமென்று பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருது தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அபிஜித் பானர்ஜி உடன் கலந்துரையாடினார்.

அதில் அபிஜித் பானர்ஜி கூறிய முக்கியமான அம்சங்கள், “தற்போதுள்ள சூழ்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிதியுதவி வழங்குவது தீர்வாக இருக்காது. அவர்கள் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்குவதற்கு அவர்கள் கையில் பணம் வேண்டும். மக்கள்பொருட்களை வாங்கினால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைய முடியும்.

மக்கள் கைகளில் பணம் வழங்குவதே பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒரே வழி. இதில் நாம் அமெரிக்காவின் வழியை பின்பற்றலாம்.

மேலும் வாசிக்க: இலவச மின்சாரத்திற்கு தடை மத்திய அரசின் ஆப்பு

கடன் தொகைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். நடப்பு காலாண்டிற்கான கடன் தவணையை ரத்து செய்திருந்தால் அது மக்களுக்கு மேலும் உதவியாக இருந்திருக்கும்.

ஜன் தன் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு பணம் வழங்கலாம். ஆனால் பலரிடம் அந்த கணக்குகள் இல்லை குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம். எனவே இந்த மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதை நாம் மேற்கொள்ளலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு நிதித்தொகுப்பு தற்போது தேவைப்படுகிறது. இதைத் தான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கையில் எடுத்துள்ளன. நாம் 1 சதவீத ஜிடிபியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவோ 10 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

மக்களுக்கு தற்காலிகமான ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம். ஒரு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக கொடுத்துவிட்டு அதன்பிறகு யாருக்கு தேவையோ அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது போல திட்டம் வகுக்கலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தைக் கையாளும் போது மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் அது சாத்தியம். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை மாநில அளவில் முடிவுகளை அனுமதிக்க வேண்டும்.

கிராமப்புற பகுதிகள் மற்றும் ஏழை மக்களை சென்றடையும் வகையில் நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட மேஜிஸ்டிரேட் முதல் தொண்டு நிறுவனங்கள் வரை அனைவரது ஆலோசனைகளையும் கேட்கலாம்.

நோயின் தீவிரத்தை பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்குவது குறித்து தீர்மானிக்க முடியும். அதிகளவிலான மக்கள் நோயுற்று கொண்டிருக்கும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியான முடிவாக இருக்காது.

ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீள் கட்டமைப்பது குறித்து நாம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று கருத்துக்களை முன்வைத்துள்ளார்.