சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மே- 5 இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

சென்னையில் மக்கள் தொகை அதிகம். குறுகலான தெருக்கள் உள்ளன. மேலும், பொதுக் கழிப்பறைகளை இங்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவைதான் சென்னையில் கொரோனா அதிகம் பரவ காரணம்.

மேலும் வாசிக்க: இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக வழங்கப்படுகிறது. தினமும், காலையிலும், மாலையிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பொது கழிப்பறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது.

சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அவர்கள் மருத்துவமனை சென்று மருத்துவ சிகிச்சை பெறுவது என்பது கடினமான விஷயம். அதனால் நடமாடும் வாகனங்கள் சென்று, அவர்களை பரிசோதனை செய்து, நோய் அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாள் தோறும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சிகிச்சை அளிக்கக் கூடியவர்களுக்கு, சென்னை மாநகரத்தில் 4000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்க வேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

மேலும் வாசிக்க: தமிழக அரசின் டாஸ்மாக் கடை அறிவிப்பால் மக்கள் அச்சம்..

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து அதிக கவனம் எடுத்து வருகிறோம். அவர்களில் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பவர்களைக் கண்டறிந்து மிகவும் பாதுகாப்பான முறையில் ஊர்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுவார்கள்.

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த மாதம் வழங்கப்படும் கட்டணமில்லா அத்தியாவசிய பொருட்கள், தொடர்ந்து மே, ஜூன் மாதங்களில் வழங்கப்படும்.

மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு வருகை தந்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டி உள்ளது. அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதால்தான் நோய் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை விட மிக அதிகம். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.