இரண்டு சுற்றுகள் கவுன்சிலின் முடிந்த பிறகும் சுமார் 8,000 இடங்கள் இன்னும் காலியாக இருப்பதால், முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண் 15 சதவீதம் குறைத்து தேசிய தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மருத்துவ படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வில் அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் ஆப் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும்,
OBC, SC, ST பிரிவினருக்கு 25% ஆகவும் கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கட் ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அகில இந்திய அளவில் இரண்டு சுற்றுகள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலின் இரண்டு சுற்றுகள் முடிந்த பிறகும் சுமார் 8,000 இடங்கள் இன்னும் காலியாக இருப்பதால், தேசிய மருத்துவ ஆணையத்துடன் (NMC) கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கை வீணடிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த சதவீதக் குறைப்பின் மூலம், நடப்பு கவுன்சிலிங்கின் சுமார் 25,000 புதிய விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை முதுகலை பட்ட படிப்பு மேற்கொள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (முதுகலை), அல்லது NEET-PG தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த முறை நடக்கவிருந்த NEET-PG தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 11, 2021 அன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.