பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை பிரதமர் மோடி நடத்தும் விதம் அவர் இந்தியாவின் பிரதமர் போல் அல்ல, பாகிஸ்தானின் பிரதமர் போல் உள்ளது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
ஆந்திர பவனில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில அரசு ஊழியர் சங்கம், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஜீத் மேனன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரையன், திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மோடி ஆந்திராவுக்கு தர வேண்டிய பணத்தை மோடி அவரின் தொழில் நண்பர்களுக்கு  ( அம்பானி , அதானி) தாரை வார்த்து விட்டார் என்றார் 
 
இந்த போராட்டத்தில் பங்கேற்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில்,
“ஒரு நபர் பிரதமரானால், அவர் ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரதமராகிறார். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் பிரதமராகவில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை நரேந்திர மோடி நடத்தும் விதம், அவர் இந்தியாவின் பிரதமர் போல் அல்ல, பாகிஸ்தானின் பிரதமர் போல் உள்ளார்” என்றார்.