பிஎஃப் என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டிற்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதமாகக் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
,
கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்.

இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதே நிலைக்கு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இபிஎப்ஓவின் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது, “சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு வட்டி விகிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சூழ்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகே 8.1 சதவீத வட்டி விகிதத்தை பரிந்துரை செய்துள்ளோம்.

சமூக பாதுகாப்பு மற்றும் சந்தை ஸ்திரத்தன்மையை இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு ஒன்றிய அரசு அதிக வட்டி வழங்கி வந்தது.

2015-16 ஆம் ஆண்டில் சந்தாதாரா்களுக்கு அதிகபட்சமாக 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாகவும் பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைத்து 8.55 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது.

2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக உயா்த்தப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் 2020-21 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. நாட்டின் 84 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான ஊழியர்களின் சேமிப்பு மீது தாக்குதல் நடத்துவது சரியா? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் தேர்தல் வெற்றியைப் பெற்ற பிறகு பாஜக தலைமையிலான அரசாங்கம் அதன் உண்மையான நிறத்தை காட்டுவதாக விஸ்வம் குற்றம் சாட்டி உள்ளார்.

பிஎஃப் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பாக மோடி தலைமையிலான ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக தாக்கி உள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஒன்றிய அரசு உழைக்கும் மக்கள் மீது மேலும் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.